மரணமில்லாத எழுத்துகளை ரூபன் நீ எழுதிக்கொண்டிருக்கிறாய்…..

மக்களது வலிகளைத்தாங்கி
காலத்தை செப்பனிடும் வார்த்தைகளை
நடு நிசியிலும் பகல் பொழுதிலுமாய்
ரூபன் நீ துயிலாது எழுதிக்கொண்டிருக்கிறாய்…

கடந்துபோன துயர் செறிந்த காலத்தை
துப்பாக்கிகள் நிர்ணயித்த போதும்
நீ மறுதலித்து எழுதிக்கொண்டிருந்தாய்

உனது பேனாவின் வீச்சில்
ஒரு கனல் எரிந்துகொண்டிருந்தது

மைபூசிய முகங்கள் கனலில் எரிந்து சாம்பலாயின

ஊடகப் பள்ளியின் பத்திரிகையை
உனது எழுத்துக்கள் நிறைத்திருந்தபோது
“எழுத்தாணி” கனதியானது
எங்களது மகிழ்வு உச்சத்தில் ஏறியது

அப்போது உனது பெயர் தவறி விழுமென
யாருமே நினைத்திருக்கவில்லை

இப்போது
எல்லோருமே சொல்கிறார்கள்
ரூபன் இறந்துவிட்டானென்றும்
எங்களைவிட்டு பிரிந்துவிட்டானென்றும்

இல்லை இல்லை
மரணமில்லாத எழுத்துக்களை
ரூபன் நீ எழுதிக்கொண்டிருக்கிறாய்

2 responses to this post.

  1. Posted by பரணிகாந் on மே 20, 2010 at 3:14 பிப

    வணக்கம் சுதேசம்…

    தங்களது கவிதைகளை வாசித்தேன். நன்றாக உள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் படைப்பாளிகள் எப்பொழுதும் மரணமில்லாத எழுத்துகளையே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்த வரி மிகவும் என்னைக் கவர்ந்திருக்கிறது.

    நன்றி

    பரணிகாந்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக