Archive for ஜூன், 2011

துயர் விழுந்த தேசத்தின் வலி

வலிகளை அதிகமாக வாங்கி
ஈராண்டு நிறைவடைந்திருக்கிறது

வலிகளோடு இன்னும் அதிக வலிகளே
நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன

துயர்மிகு காலத்தில் பல யுகத்தின் மழை
கந்தகக் குண்டுகளாய் கொட்டித் தீர்த்தது

பதுங்கு குழிகளுக்குள் மக்கள்
அடைபட்டுப்போயினர்
மரண வாசல் கதவு மக்களுக்காய் திறக்கப்பட்டது

உயிர்ப்பிச்சை கேட்டு அழுதவர்கள்
குண்டுகளையும் ரவைகளையும் பருகினர்;; கருகினர்

புலத்தில்
கோட்டை கோபுரங்களது செவிப்பறை கிழிய
உறவுகள் கத்தினார்கள் கதறினார்கள்
வீதியில் வேலியிட்டு அரசர்களையும் ராணிகளையும் கூவியழைத்தார்கள்

முழுநெருப்பாய் தம்முடலை எரித்து
வலிகளை உணர்த்தினார்கள்

வெள்ளைக் கோட்டை அரசர்களும் ராணிகளும்
காதுகளில் ரப்இ பொப் இசைகளை செருகியபடி
ஊழித்தாண்டவத்துக்கு உரமிட்டுக்கொண்டிருந்தார்கள்

முள்ளிவாய்க்காலில் பிணங்கள் சிதறிக்கொண்டிருந்தன

இப்போது
பிணங்களை பேசவிடாது
புதைகுழிகளுக்கு மேல் சித்தனை
பரிநிர்வாண நிலையில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள்

சித்தனின் சீடர்களும் பரிவாரங்களும்
எங்கள் குழந்தைகளது
கபாலங்களையும் எலும்புத் துண்டங்களையும்
ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பிரித்தோதுகின்றனர்

துட்டகைமுனுக்கள்
நெடுஞ்சாலைகள் வழியேயும்…
புதைகுழித் தோட்டங்களிலும்…
விருட்சங்களின் கீழேயும்…
முள்விதை எறிந்துகொண்டிருக்கிறார்கள்…..