பிணந்தின்னிப் பறவைகள்

eggle[1]

பிணந்தின்னிப் பறவைகள்
———————————

இப்போதெல்லாம் எங்கள் வானத்தில்
பிணந்தின்னிப் பறவைகள்

எம்முடல்களைத் தின்று
வாழிடங்களை
மரண ஓலங்களால் நிரப்புகிறது.

கொடுமைகளுக்கிடையே
குறுக்கீடு நிகழ்த்திட யாருமில்லை

உணர்வுகள் உடைந்து
எதிர்காலமே தொலைந்தவர்களாய் நாம்

எவருடைய உதட்டிலும் புன்னகையில்லை

நாற்காலி மனிதர்கள்
பிணந்தின்னிப் பறவைகளால் மேலும்
எங்கள் வானத்தை நிரப்புகிறார்கள்.

நன்றி : வார்ப்பு இணையத்தளம்

துப்பாக்கிதாரியும் துரந்து வரும் மரணமும்

thupa_visi230608[1]

துப்பாக்கிதாரியும் துரந்து வரும் மரணமும்

01.
துப்பாக்கிதாரியும் துரந்து வரும் மரணமும்
—————————————————-

புலன்கள் விகாரித்து
கொடிய மிருகங்களாகி
இருள் சூழ்ந்த பொழுதுகளில் அலைபவர்கள்

எனது கண்ணீரையும் குருதியையும் கொண்டு
எனதுடலில் சுடுகாட்டின் ஓவியம் வரைகிறார்கள்

காப்பாற்ற வேண்டி கதறிய போதிலும்
கருணை செய்ய யாருமில்லை

சித்திரவதையின் உச்சத்தில் எந்த தெய்வமும்
என்னுடன் இருந்ததாகத் தெரியவில்லை.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் அறுபட்டு
உணர்வுகள் குலைந்து போயிற்று.

அவனிடம் இருந்த துப்பாக்கி
என்னுடையவை எல்லாவற்றையும்
என்னையும் முடித்துவிட்டது.

நன்றி : வார்ப்பு இணையத்தளம்

வற்றாத நேசத்தின் துளி

வற்றாத நேசத்தின் துளி

அந்தி சாயும் பொழுதொன்றில்
நீ என்னோடு பேசி
விடைபெற்றுச் சென்ற பின்னரான தனிமை
துயருடைத்து வார்த்தைகளாயின
உதடு கிழிந்து வலிகள் பெருகலாயிற்று

பின்வந்த நாட்களில்
காற்றலையோ……..
முகில் கூட்டங்களோ………
அல்லது ஒரு பட்சியோ…….
உனைப்பற்றி எதுவுமே சொல்லிச் செல்வதாயில்லை.

அந்தரித்தலைகிறது எனதாத்மா

உனைப்பற்றியதான
நினைவலைகளைக் கிழித்து
உறக்கப் புதைகுழிக்குள் புதைந்து விடமுடியாதபடி
நினைவின் எல்லா வாசல்களையும்
நீயே அடைத்து நிற்கிறாய்

இந்நேரம் நீ
வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கிடையில்
உறக்கமின்றியிருக்கக்கூடும்
ஆனாலும்
என்மீதான உனது முற்றிய நேசம்
சற்றும் விடுபட்டு போகாதிருக்குமென நம்புகிறேன்.

துப்பாக்கி ரவையோ……..
பீரங்கிக் குண்டுகளின் சன்னங்களோ…..
நம்மிருவரில் ஒருவரின் உடல்களை துளைக்கமுன்பு
ஒரு தடவையாயினும்
நாம் சந்தித்திட வேண்டும்.
அப்போது
வற்றாத நேசத்தின் ஒரு துளியையேனும்
பகிர்ந்து கொள்வோம்.

நன்றி : வார்ப்பு இணையத்தளம்

துயரிசை

thooyar_visithra27012008[1] 

மயானக் குருவியின் இசைக்குறிப்பில்
எனது குரலின் துடிப்பு
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது

அது
துயரங்களை அள்ளிவந்த காற்றின்
இழையறுத்து சுதியும் லயமும் சேர ஆலாபிக்கிறது

நெஞ்சுக்குள் எரியும் நெருப்பும்
மீள மீள உயிர்க்கும் துயரங்களுமே
பாடுபொருளாகின்றன

கிளைவிரிந்த எனது மன வெளிகளில்
இன்னும் ஒளியெறிக்கவில்லை
காற்று வீசவில்லை

இலட்சிய விம்பமும்
துன்பியல் சாயமிடப்பட்ட காதலும்
எண்ணிமுடிக்க முடியாத தோல்விகளுமே
வாசனையோடு பூத்திருக்கின்றன

எந்தச் சாமியும் இந்தப் ப+க்களை
பூசைக்கு ஏற்கவில்லை
என் வாலிபத்தோடு வலிகளே நெருக்கமாயின

வலிகளைத் தாண்டி புறப்படும் நேரம்
மயானத்தின் வெளிகளிலெல்லாம்
இசைவிரிகிறது

துயரம் நிறைந்த எனது குரலின் துடிப்புகளோடு

நன்றி : வார்ப்பு இணையத்தளம்