ஆதி இனமொன்று
சிதறடிக்கப்பட்டிருக்கிறது
இனத்தின் முகம் கிழித்து
துயரங்களால் வேலியிட்டு
இருப்பு சூனியமாக்கப்பட்டிருக்கிறது
ஆண்டுகள் பிறக்கின்றன கழிகின்றன
தமிழினம் இறந்துகொண்டிருக்கிறது
2010 உதயமாகிறது…
மாண்டுபோன இனத்தின் கபாலங்களில்
புதிய பிரகடனங்கள் தொங்கவிடப்படும்
துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும்
பொல்லாத பாசிசங்களுக்கு
வல்ல பாசிசங்கள்
தங்களது சமாதானக் கரங்களால்
மீண்டுமொரு தடவை
பரிசளிக்கக்கூடும்
அப்போதெல்லாம்
எஞ்சிய பிணங்கள்
குருதியால் நனைக்கப்படும்
புத்தாண்டே !
மீண்டும்
வலிகளால் எங்கள் வாழ்வை
நிரப்புவாயென்றால்
இப்போதே எங்களை
உனக்கு படையலிடுகின்றோம்
நீ
பிறக்க வேண்டாம்
கருவிலே அழிந்து போ.
நன்றி : லங்காசிறி இணையத்தளம்