மனசில் பாரச்சிலுவைகளைச் சுமந்தபடி
எல்லோரும் நடக்கிறார்கள்……………
பாதங்கள் வலிகொள்வதாக
பாதங்களே சொல்கின்றன.
கல்லுகளையும், முள்ளுகளையும்
மேடுபள்ளங்களையும்
தாண்டி விரைகின்றோம்.
விஷ ஜந்துகள் இடையில் வந்தால்
விலத்திப் போகிறோம்.
எம்மையறியாமலே கால்களுக்கு
இடையிடையே,
வேகங்கள் பூட்டப்படுகின்றன.
இன்னும் நடப்பதற்கு
பாக்கி அதிகம் இருக்கிறது.
தாகம் நாக்கைச் சுடுகிறது மேகம் எங்களை
வெறித்துப்பார்க்கிறது
காற்று
கணத்துக்கு கணம் – எங்கள்
மூச்சை வாங்குகிறது.
இருந்தாலும்
நடக்கிறோம்,தொலை தூரத்தை
தொலைத்துவிட்டாற்போல……….
கிளிகளின் கலகலப்பு
குயில்களின் கும்மாளப் பாட்டு
காக்கைகளின் ஒற்றுமை கீதங்கள்
எவற்றையுமே கேட்க முடியவில்iலை.
நாங்கள் ஊரிழந்து போவதால்
அவை அழுதுகொண்டு எங்கோ பறந்து விட்டனவோ?
வானத்தில் குண்டுகளின் கூவல்கள்
கேட்கின்றன
விளைநிலங்களில் பூக்களும் பிஞ்சுகளும்
பிய்ந்து பிய்ந்து உதிர்கின்றன……….
நாய்களின் ஓலங்கள்
நடுத்தெருவில் மந்தைக் கூட்டங்களின்
உறங்கல்கள் போல்
மக்கள் கூட்டங்கள்
ஒன்று சேர்த்து அழவைக்கின்றன
ஒப்பாரி…….. , முகாரி……..
இரங்கல் திருப்பலியின் இறுதி வடிவமாய்………
நாடோடிப் பாட்டு – எங்கள்
காதுகளில் மட்டுமே எதிரொலித்தன.
இப்போது,
ஈழத்தமிழர் நாங்கள்
நாடோடி
நடைப்பிணங்களான பின்பும்
பிணங்களைச் சுமந்து
நெஞ்சு கிழிந்து இரத்தம் வழிய
திசையறியா திசைநோக்கி
செல்கிறோம்…….
இப்போது,
நெஞ்சை அடைக்கிறது துயரம்.
நீள் தொலைவுவரை
யாருமே இல்லை….!
கள்ளிக்காடுகளையும்,
சாம்பல் பூத்த மேடுகளையும் தவிர,
யாருமே இல்லை..!
தொட்டுத் திரும்புகின்றன
சுடுகாற்று
எங்கள் அழுகுரல்களே
மீண்டும் மீண்டும் எதிரொலித்து
எங்கள் காதுகளில் விழுகின்றன……..
நடந்து வந்த தூரங்களை
எங்களால் கணக்கிலிட முடியவில்லை.
இழந்துவந்த ஊர்களைச் சொல்ல
நாவுக்குப் பலமில்லை-வேணுமென்றால்
நிலத்தில் விழுகின்ற
கண்ணீர்த்துளிகளை எண்ணிக்கொளுங்கள்
எங்கள் பரிதாபம் புரியும்.
மாடிமனைகள்,கோவில் குளங்கள்
பாடித்திரிந்த வயல்வெளிகள்
முற்றத்து வெளியில்
கிளித்தட்டுப் மறித்துப்பெற்ற
காய், பழங்கள்
மாலை ஏழுமணி என்றவுடன்
அரட்டையடிக்கும் ஆலமரக்கட்டு
களிப்பூட்டும் வெள்ளையண்ணையின்
நீள்பனைக் கள்ளு
செல்லாச்சியின் பழஞ்சோத்துத் தண்ணியும்
பனம் பினாட்டும்
இன்னும் என்னென்னவோ
எல்லாம்………………..
என் நினைவுகளி;ல் நின்று
நிழலாடி மறைகின்றன-இப்படி
எத்தனை ஊர்களை இழந்து வந்தோம் – இன்னும்
இதயவலி குறையவில்லை.
இருள் மெல்ல மெல்ல
கௌவிக்கொள்கிறது………
ஆலமரத்தின் விழுதினைப் பிடித்தபடி
மண்ணிலே மெல்ல
சுருண்டு படுக்கிறேன்
அப்பா! என்று – எனது
பிஞ்சு வயது மகனின்
ஆவேசக் குரல் செவிப்பறையை முட்டுகிறது.
துயில் கலைகிறது
அவனது கையிடுக்கிலிருந்த பொம்மை
மெல்ல விழுகிறது.
பிடியுங்கள், அந்தச் சூரியனை
இந்தப் பயங்கர இருளை எரிப்போம் என்றான்.