உயிர் தின்னும் மரணநதி
சலனமற்ற இரவில்
சலசலத்து ஓடும் மரண நதி
ஈவிரக்கமின்றி இழுத்துச் செல்கிறது மனிதர்களை
நதியின் தந்தையர்களாலும் புதல்வர்களாலும்
பிணங்களில் ஊற்றப்பட்ட வன்முறையின் நாற்றம்
ஜனநாயகத்தின் நறுமணத்தை மூழ்கடிக்கிறது
நதியின் இருளில்
மெழுகுவர்த்திகள் அணைந்துபோகின்றன
இருப்பின் அத்திவாரம் உடைந்த
குழந்தையினதும் கிழவனினதும் உயிரில் விழும்
மரண நதியின் ஓசை
அவர்களைத் தின்னுகிறது
அணைகளிடப்படாத் தேசத்தில்
இன்னும் கழுவப்படாத வன்முறைகளும் இருளுமாய்
மரணநதி பெருகிப் பாய்கிறது.
நன்றி : காலச்சுவடு